ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து விடயங்களுக்கும் தீர்வு:அலி சப்ரி
உள்நாட்டில் வாழ்கின்ற அனைத்து சமூகங்களும் ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் தீர்வினை எட்டுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்கள் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் மற்றும் மனித உரிமைகள் நிலை தொடர்பாக, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெஸ்மினிஸ்டர் மண்டபத்தில் கடந்த 5ஆம் திகதி தமிழருக்கான பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவரான எலியட் கொல்பேர்னினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
மனித உரிமைகள்
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறித்த விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,''பிரித்தானிய அரசியல்வாதிகள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொகுதிகளில் தமது வாக்கு வங்கியை பாதுகாத்துக்கொள்வதற்காகவே செயற்பட்டுள்ளனர்.
ஆகவே, குறித்த வெஸ்மினிஸ்டர் மண்டப விவாதமானது, வாக்கு வங்கி அரசியலுக்கானது என்பது மிக தெளிவான விடயமாகின்றது. அந்தவகையில் அவ்விடயம் சம்பந்தமாக நாம் பெரிதாக கரிசனைகளை கொள்ளவில்லை.
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் அதேநேரம் அதற்கு சமாந்தரமாக இனங்களுக்கு இடையில் நிரந்தரமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
விசேடமாக, தற்போது இலங்கையின் உள்நாட்டில் வாழ்கின்ற அனைத்து சமூகங்களும் ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் தீர்வினை எட்டுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்கள். அதற்காக அவர்கள் கடந்த தேர்தல்களில் ஆணையும் வழங்கியுள்ளார்கள்.
பொருளாதார நெருக்கடி
மேலும் நடைமுறை சாத்தியமான வகையிலான கோரிக்கைகள் பற்றியே சிந்தித்து கலந்துரையாட வேண்டியுள்ளது.
அந்த வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதை நோக்கிய செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது.
அதுமட்டுமன்றி, தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கான அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் தவறான தரவுகள் மற்றும் தகவல்களுடன் புரிதலின்றி வெளிப்படுத்தல்கள் சம்பந்தமாக நாம் கவலை அடைகின்றோம். அதுமட்டுமன்றி சில முக்கிய விடயங்களையும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது."என கூறியுள்ளார்.