கட்டாயமாக்கப்படும் நடைமுறை: உயர் நீதிமன்றில் அறிவிப்பு
வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்படும் நபருக்கு குறித்த முறைப்பாட்டின் உள்ளடக்கம் தொடர்பான அறிவிக்கப்படுவதை கட்டாயமாக்கவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை உயர் நீதிமன்றில் இன்று (27.02.2024) அவர் அறிவித்துள்ளார்.
இதன்போது முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்படும் தரப்பினருக்கு, தொடர்புடைய முறைப்பாட்டின் உள்ளடக்கம் குறித்து அறிவிப்பதனை கட்டாயமாக்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை உரிமை மனு
வலுசக்தி துறை தொடர்பான ஆர்வலர் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்கு வருகைதருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தம்மை தொலைபேசியில் அழைத்ததாகவும், அதற்கான காரணத்தை அவர்கள் குறிப்பிட மறுத்தமையினால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், மனுவின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி இந்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.