தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிவிப்பு

By Mayuri Oct 24, 2024 07:59 AM GMT
Mayuri

Mayuri

வீடுகளுக்கு வரும் தொகைமதிப்பு கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு துல்லியமான தகவல்களை வழங்குவதனூடாக 2024 குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்புக்கு ஆதரவளிக்குமாறு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டீ.டீ.ஜீ.ஏ. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி 'தொகை மதிப்பு தினம்' என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் தொகைமதிப்பு வரலாற்றில் முதற் தடவையாக கணனி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

தகவல் சேகரிப்பு

மேலும், அரசாங்க அதிகாரிகள் உட்பட நன்கு பயிற்றுவிக்கப்பட்ட சுமார் 35,000 அதிகாரிகள் தகவல்களை சேகரிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த தொகை மதிப்பு கணக்கெடுப்பு அதிகாரிகள், தகவல்களை சேகரிப்பதற்காக வீடுகளுக்கு வருவார்கள் என்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிவிப்பு | Department Of Census And Statistics

குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பு என்பது, நாட்டின் எதிர்கால கொள்கைத் திட்டமிடல் மற்றும் நிரலாக்கத்திற்குத் தேவையான மக்கள்தொகையின் கட்டமைப்பைப் பற்றிய விரிவான தகவல்களின் முக்கிய ஆதாரமாகும்.

10 வருடங்களுக்கு ஒருமுறை சேகரிக்கப்படும் இந்தத் தகவல்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் புள்ளி விவரங்களே எதிர்கால சந்ததியினருக்கும், நாட்டின் வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பதால், பொதுமக்கள் அதற்கான பூரண ஆதரவை வழங்குமாறும் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW