கிண்ணியாவில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும் சிரமதானப் பணியும்...
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ், டெங்கு நுளம்புப் பரவலைக் கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலமும் சிரமதானப் பணியும் இன்று (18) கிண்ணியா பிரதேசத்தில் மிகப்பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டன.
கிண்ணியா நகர சபை மற்றும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன இணைந்து இந்த விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை ஒழுங்கு செய்திருந்தன.
பின்னணி மற்றும் நோக்கம்
கடந்த வாரம் கிண்ணியா பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் போது, நுளம்புகள் பெருகக்கூடிய சாத்தியமான இடங்கள் பல அடையாளம் காணப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சூழலைச் சுத்தப்படுத்தவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பேரணி கிண்ணியா பொது நூலக பிரதான வீதிச் சந்தியிலிருந்து ஆரம்பமாகி, கட்டையாறு ஜும்மா பள்ளிவாயல் வரை சென்றடைந்தது.
பேரணியில் கலந்துகொண்டோர் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பலகைகளை ஏந்தியிருந்ததுடன், பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.
தீவிர பரிசோதனை
சின்னக் கிண்ணியா கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பின்வரும் பகுதிகளில் தீவிர பரிசோதனைகளும் சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

கட்டையாறு பகுதி, மதுரசா லேன் (Madrasa Lane) அல் அக்சா பாடசாலை வீதி ஆகிய இடங்களில், வீடுகள் மற்றும் பொது இடங்களில் தேங்கிக் கிடந்த கழிவுகள் அகற்றப்பட்டதுடன், நுளம்பு பெருகும் இடங்கள் துப்புரவு செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம். எம். மஹ்தி, நகர சபை செயலாளர் எம். கே. எம். அனீஸ், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம். எம். அஜித், பொறுப்பதிகாரி சமிந்த பண்டார உட்பட நகர சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு இப்பணியினை முன்னெடுத்தனர்.



