நாளை இலங்கைக்குள் நுழையவுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை
நாளை (09) பிற்பகல் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை பகுதிகளிலிருந்து காற்றழுத்தத் தாழ்வு நிலை நாட்டை நோக்கி உள்நுழையக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதகமான வானிலை குறித்த சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
காற்றழுத்தத் தாழ்வு நிலை
தற்போது நாட்டின் கிழக்கு கடற்கரையில் பொத்துவில் பகுதியிலிருந்து தென்கிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (08) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது.
இது தற்போது பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார்.
மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த சில மணி நேரத்தில் கிழக்கு கடற்கரையை அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் தாக்கம் காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைவிடாத மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.