இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் காஸா படையினருக்கு இடையிலான போரால், கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரின் காரணமாக வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (09.10.2023) சரிவுடன் தொடங்கி சரிவுடனேயே முடிந்தது. பங்குச்சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவியதால், முதலீட்டாளர்கள் பெரும் இழப்பையே சந்தித்தனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்வுடன் நிறைவடைந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.18 டொலர் அல்லது 4.94 சதவிகிதம் உயர்ந்து, பேரலுக்கு 88.76 டொலர்களாக விற்பனையானது.
ஏற்றுமதியில் பெரும் பற்றாக்குறை
உலக நாடுகளுக்கான உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகிறது.
ஆனால், அந்தப் பகுதிகளுக்குட்பட்ட இஸ்ரேல் இராணுவம் - பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸா எல்லையைச் சேர்ந்த ஹமாஸ் படையினருக்கு இடையேயான போரால் ஏற்றுமதியில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் சந்தையில் நிலையற்றத்தன்மை நிலவுகிறது. எனினும் ஈரான் வழக்கத்தை விட தனது உற்பத்தியை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.