கோவிட் தொற்று தொடர்பான அரசாங்கத்தின் பிழையான தீர்மானம்: ரவூப் ஹக்கீம் ஆதங்கம்
கோவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்வது தொடர்பில் நிபுணர்குழு மேற்கொண்ட தீர்மானங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,“வைரஸ் நீரின் ஊடாக பரவும் என்ற கொள்கையை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரே கொண்டுவந்தார்.
அதனடிப்படையிலேயே கோவிட் தொற்றில் இறந்த இஸ்லாமியர்கள் மாத்திரமின்றி பெளத்தர்கள் இந்துக்கள் கத்தோலிக்கர் மிகவும் தூரப்பிரதேசமான ஓட்டமாவடிக்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்யப்பட்டனர்.
ஒருவர் இறந்தால் அவருடன் இருக்கும் வைரஸ்களும் இறக்கும்
இது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படாத, இனவாத அடிப்படையில் பார்க்கப்பட்டது. எந்தவொரு வைரஸும் நீர் ஊடாக பரவுவதில்லை என விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ஒருவர் இறந்தால் அவருடன் இருக்கும் வைரஸ்களும் இறக்கும் என இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அதனால் அரசாங்கம் இந்த விடயத்தில் சில இனவாதிகளால் பிழையாக வழிநடத்தப்பட்டிருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா என கேட்கிறேன்.
அத்துடன் நிபுணர்குழுவின் பிழையான தீர்மானம் காரணமாக அதிகமான மக்கள் அந்த காலகட்டத்தில் இனவாத அடிப்படையில் பாதிக்கப்பட்டிருந்ததுடன் அதிகமான மன அழுத்தங்களுக்கும் ஆளாகி இருந்தார்கள்.
நிபுணர் குழுவின் தீர்மானம் காரணமாக அரசாங்கத்துக்கும் அதிக செலவு ஏற்பட்டது. அதேபோல் இறந்தவர்களின் குடுபத்தினரும் பாதிக்கப்பட்டனர். அதனால் தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க இடமிருக்கிறது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?”என கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now |