வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை மீள சேவையில் இணைக்குமாறு அறிவுறுத்தல்
சிங்கள பெண்களுக்கு கருத்தடைகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த மருத்துவர், ஷாபி சியாப்தீன், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாதநிலையில், மீண்டும் குருநாகல் மருத்துவமனை சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார்.
இதற்கான அறிவுறுத்தலை அரச சேவைகள் ஆணைக்குழு விடுத்துள்ளது.
சட்டவிரோதமாக கருத்தடை செய்தமை மற்றும் நிதிச் சலவை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள், அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த நிலையில், நிபுணர் குழுவொன்று அவற்றை விசாரணைக்கு உட்படுத்தியது. இதன்படி, குறித்த விசாரணைக்குழு முன்வைத்த அறிக்கையில்,
மருத்துவர் ஷாபி சியாப்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், எழுத்துமூல மற்றும் வாய்மூல சாட்சிகளின் ஊடாக நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அவருக்கு எதிரன ஒழுக்காற்று நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, அரச சேவைகள் ஆணைக்குழுவின் சுகாதார சேவை குழுவின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறியப்படுத்தியுள்ளார்.