விரும்பும் முகவர்களிடம் ஆவணங்களை சமர்ப்பித்து மே 5 இற்கு முன்பு ஹஜ் பயணத்தை உறுதி செய்க
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஹஜ் யாத்திரையை இவ்வருடம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதிக்கு முன்பாக தாம் விரும்பும் ஹஜ் முகவர்களிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தங்கள் பயணத்தை உறுதி செய்து கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வருடம் ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு திணைக்களத்தினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள ஹஜ் முகவர்கள் ஊடாகவே பயண ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியும். இவ்வருடம் 105 ஹஜ்முகவர் நிலையங்களுக்கு திணைக்களம் அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது. இவர்களது பெயர் விபரங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதெனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
இலங்கைக்கு சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு 3500 ஹஜ் கோட்டாவினை வழங்கியுள்ளது. ஹஜ் முகவர்கள் சவூதி அரேபியாவில் வழங்கும் சேவைகளுக்கு அமைவாகவும் ஹஜ் கட்டணம் அறவிடப்படவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி அல்லது 4 ஆம் திகதி முதலாவது ஹஜ் விமானம் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.-