சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ள பிரேரணை
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்ற தெரிவுக் குழு அமைக்க கோரும் யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
எதிரணிகளின் சார்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் இந்த யோசனை இன்று(18.12.2025) முன்வைக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
யோசனை
டித்வா புயல் தாக்கம் உட்பட சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது என எதிரணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இவ்வாறு எச்சரிக்கை விடுத்தும், அனர்த்தங்களை குறைப்பதற்கு – கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விமர்சனத்தையும் எதிரணிகள் முன்வைத்து வருகின்றன.
இந்நிலையிலேயே இது விடயத்தில் எங்கு தவறு நடந்துள்ளது? பொறுப்பு கூற வேண்டிய தரப்பு எது மற்றும் எதிர்காலத்தில் இப்படியான நிலை ஏற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும்? என்பன பற்றி நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைத்து ஆராய வேண்டும் என எதிரணிகள் யோசனை முன்வைத்துள்ளன.
இந்த கோரிக்கை அடங்கிய ஆவணமே சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அனர்த்தம் தொடர்பில் இன்று சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறுகின்றது.