மத நிந்தனை குற்றச்சாட்டில் நகைச்சுவை கலைஞர் நடாஷா கைது
ஸ்டாண்ட் அப் நகைச்சுவை கலைஞர் நடாஷா எதிரிசூரிய நேற்றிரவு (27.05.2023) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் நடைபெற்ற மோடாபிமானய (முட்டாள் பெருமை) எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஸ்டாண்ட் அப் நகைச்சுவை வழங்கிய அவர் ஒரு கட்டத்தில் கௌதம புத்தரை சுத்தோதன (மன்னனின்) சிறு குழந்தை என்று வர்ணித்திருந்தார்.
கடும் கண்டனம்
அதனையடுத்து கெளதம புத்தரை நிந்தித்து விட்டதாக தெரிவித்து அவர் மீது பௌத்த மதபீடங்கள் மற்றும் மதத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் நேற்று மாலை சிங்களே அபி அமைப்பின் தலைவர் டான்பிரியசாத், நடாஷாவுக்கு எதிராக பொலிஸ் தலைமையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு பதினொரு மணியளவில் சிங்கப்பூர் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வருகை தந்த நடாஷா, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் அவர் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.