கொழும்பு மாநகர சபை பாதீடு தோல்விக்கான காரணத்தை வெளிப்படுத்திய முன்னாள் எம்.பி
கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட தோல்விக்கு சர்வஜன அதிகாரம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு உறுப்பினர்களின் வாக்குகள் தீர்மானம் மிக்கதாக மாறியதாக முன்னாள் எம்.பி.பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சூழ்நிலை
தொடர்ந்துரையாற்றிய அவர், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் கடைசி நேரத்தில், எழுந்த சூழ்நிலை கருத்தில் கொண்டு சர்வஜன அதிகாரம் கட்சியின் இரண்டு வாக்குகளையும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்த முடிவு செய்ததாக அவர் கூறினார்.

இந்த முடிவின் காரணமாக, கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியால் சமர்ப்பிக்கப்பட்ட முதல் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க முடிந்தது.
இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மோசடியான முறையில் அதிகாரத்தை கைப்பற்றிய சபைகளின் உண்மை தன்மையை இந்த சம்பவம் தெளிவாக வெளிப்படுத்துகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இரகசிய வாக்கெடுப்பில் அதிகாரத்தைப் பெற்ற, உள்ளூராட்சி நிறுவனங்களின் வரவு செலவுத் திட்டங்கள் தற்போது ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியடைந்து வருகிறது.
ஆணையாளர்களின் தலையீட்டால் ஆட்சியை கைப்பற்றினாலும் அவற்றை தக்கவைத்து கொள்ள முடியவில்லை என்பதை இந்த தோல்விகள் தெளிவுபடுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.