கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 300 அபாயகரமான மரங்கள் அடையாளம்

By Mayuri Oct 12, 2023 06:39 AM GMT
Mayuri

Mayuri

கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 300 அபாயகரமான மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன. குறித்த மரங்கள் மக்களுக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றன.

எனவே, இது தொடர்பில் ஆராய்ந்து குறித்த மரங்களை அகற்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 100,000 க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் உள்ளன. அவற்றில் 300 அபாயகரமானவை இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நேற்று புதன்கிழமை (11) இடம்பெற்ற அபாயகரமான மரங்கள் முறிந்து விழுவதைத் தடுத்தப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

புறநகர் பகுதிகளில் சூழலுக்குப் பொருத்தமான மரங்கள் நடப்படுவதை உறுதி செய்யும் முறையான திட்டத்தை தயாரிக்குமாறு இராஜாங்க அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபை எல்லையில், குறுகிய கால தீர்வாக, பொருத்தமான வேலைத்திட்டங்களை முறையான ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் ஆரம்பிக்குமாறு இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறுவதற்கும் மற்றும் புறநகர் பகுதிகளில் அபாயகரமான மரங்களை அடையாளம் காணவும், இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கு நீண்டகால தீர்வைத் தயாரிக்கவும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் பயன்படுத்தும் தொழில்நுட்ப முறைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டார்.