மலையக எழுச்சி பயணத்திற்கு கிழக்கில் ஆதரவு
மலையக தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்தியத் தமிழ் மக்களின் இருநூறு வருடத்தை அனுஷ்டிக்கும் முகமாக மன்னாரில் இருந்து மாத்தளை வரை இடம்பெறும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பிலும் நடைப்பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.
காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் இதனை தெரிவித்துள்ளார்.
வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நகர் வரை இன்று( 08.08.2023) இடம்பெற்ற இப்பேரணியில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டடுள்ளனர்.
மலையகத் தமிழ் சமுதாயத்தின் வரலாறு
“மலையக எழுச்சிப் பயணம்” என்பது சக சகோதர பிரசைகளுடனான ஓர் உரையாடலாகும் என்றும் சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சக சகோதர பிரஜைகள் மத்தியில் மலையகத் தமிழ் சமுதாயத்தின் வரலாறு, போராட்டங்கள், சாதனைகள், பங்களிப்பு, தற்போதைய சமூக பொருளாதார- அரசியல் அந்தஸ்து மற்றும் அபிலாஷைகள் ஆகியவை பற்றிய அடிப்படை மட்டத்திலான புரிதலை ஏற்படுத்துவதே இந்தப் பயணத்தின் இலக்காகும் என மலையக எழுச்சி பயண ஏற்பாட்டுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





