இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்படவுள்ள சீன கடல் ஆராய்ச்சி கப்பல்..!
சீனாவின் மற்றும் ஒரு கடல் ஆராய்ச்சிக் கப்பலான 'ஷி யான் 6' என்ற கப்பல் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இலங்கை துறைமுகங்களில் நங்கூரமிடும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கப்பல் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகங்களில் நங்கூரமிடும் என கூறப்படுகின்றது.
ஷி யான் 6 கப்பலுக்கு இலங்கை இன்னும் பச்சை சமிக்ஞை கொடுக்கவில்லை என்றாலும், இலங்கை தனது ஒப்புதலை வழங்கும் என்று எதிர்பார்க்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் - மோடிக்கு உறுதி
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்து, இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு மற்றும் மூலோபாய அக்கறைகளை நாடு கவனித்துக் கொள்ளும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு உறுதியளித்த நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இவ்விடயம் இந்தியாவைக் கவலை கொள்ளச் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய ஊடக அறிக்கைகளின்படி, ஷி யான் 6, கணிசமான 3,999 தொன்கள் எடை கொண்டது. தற்போது தென் சீனக் கடலுக்குள் அமைந்துள்ளது மற்றும் தற்போது தெற்கு திசையில் பயணிக்கிறது என கூறப்பட்டுள்ளது.