சீன ஆராய்ச்சி கப்பல் தொடர்பில் ஜனாதிபதி ரணிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு சீன ஆய்வுக் கப்பலான ஸி யான் 6க்கு (Shi Yan 6 ) அனுமதி வழங்குவதா என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தலைவலியாக மாறியுள்ளது என்று ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்திய-சீன பதற்றம் மீண்டும் ஒருமுறை ஏற்பட்டு, இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் நடுநிலைமையை சோதிக்கும் வகையில் இது மாறியுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இது ஒரு உளவுக் கப்பல் என்றும் இந்தியாவின் பாதுகாப்பிற்குப் பாதகமானது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராஜதந்திர நடைமுறைகள்
எனினும் இந்த கப்பலை இலங்கைக்குள் அனுமதிப்பது குறித்து சீன தூதரகத்தின் கோரிக்கை தொடர்பில், இலங்கை அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று வெளியுறவு அமைச்சகத்தின் பொது இராஜதந்திர பணிப்பாளர் பிரியங்க விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கோரிக்கையின் பேரில் அமைச்சகம் வழக்கமான இராஜதந்திர நடைமுறைகளைப் பின்பற்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படைப் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய இது குறித்து வெளியிட்ட தகவலில், கப்பல் அக்டோபர் 25ஆம் திகதி வரவுள்ளதாகவும், அனுமதி வழங்கப்படுவதைப் பொறுத்து நவம்பர் 10ஆம் திகதி வரை இலங்கைக் கடற்பரப்பில் தரித்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த கப்பலின் உளவுத்துறை சேகரிக்கும் திறன்களில் இந்தியாவின் அதிருப்தியை நிராகரிக்க முடியாது என்று இந்தியத் தரப்புக்கள் கூறுகின்றன.
4000 தொன் ஆழமான கடல் அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலான இது, புவி இயற்பியல் ஆய்வு, கடல்சார் புவியியல், கடல் புவியியல் மற்றும் சூழலியல் ஆகியவற்றை ஆய்வு செய்யும் திறன் கொண்டது.
மேலும் நில அடிப்படையிலான ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்யக்கூடிய மாதிரிகளை இது சேகரிக்கிறது.
திருத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை
இதேவேளை நாரா (NARA) என்ற தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், சீனாவின் அறிவியல் கல்லூரியுடன் 2017இல் செய்து கொண்ட உடன்படிக்கை ஐந்து ஆண்டுகளில் முடிவுக்கு வந்துள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தானாக மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும் என்று பரிந்துரைத்த ஒரு சரத்து இருந்தபோதிலும், புதிய திருத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கையொப்பமிடவே தாம் விரும்புவதாக நாரா, சீனப் பிரதிநிதியிடம் தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கையின்படி, ஆராய்ச்சியில் பெறப்பட்ட எந்தத் தரவையும் இரண்டு தரப்பினர் மத்தியில் பகிர்ந்து கொள்ள முடியும்.
அத்துடன் ஆய்வின்போது கப்பலில் சிறிலங்காவின் நாரா அதிகாரிகளும் பிரசன்னமாகியிருக்க வேண்டும் என்றும் ஆய்வின்போது பெறப்படும் தரவுகள், இலங்கை அரசாங்கத்தின் சொத்தாகக் கருதப்படவேண்டும் என்று நாரா அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |