பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் சீன அரசாங்கம் வெளியிட்ட தகவல்
2025ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் தயாராக உள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.
கம்பஹா கெப்பிட்டிபொல தேசிய பாடசாலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கான உத்தியோகபூர்வ சீருடைகளில் கடந்த வருடம் 70 வீதத்தையும் இந்த வருடம் 80 வீதத்தையும் சீனா நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களின் சீருடை
அத்தோடு ,அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களின் சீருடைகளில் 100 வீதத்தை நன்கொடையாக வழங்க தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக கீ சென்ஹொங் குறிப்பிட்டுள்ளார்.
வருட இறுதிக்குள் 3 பிரிவுகளின் கீழ் இதனை வழங்க எதிர்பார்ப்பதாகவும் சீனா, இலங்கையின் உண்மையான நண்பனெனவும், நல்லதொரு பங்காளியெனவும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின்(Aunra Kumara Dissanayake) பலமான தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை புதிய யுகத்தை நோக்கி நகர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த புலமைப்பரிசில் திட்டம் 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது இலங்கையில் 20 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |