கிழக்கில் பல்துறை சார் மானிய உதவிகளுக்கு பல பில்லியன் நிதி: சந்தோஷ் ஜா தெரிவிப்பு
கிழக்கு மாகாணத்தின் பல்துறை சார் மானிய உதவிகளுக்கு 2.35 பில்லியன் இலங்கை ரூபாய்களை ஒதுக்க இந்தியா உறுதியளித்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை- திருக்கடலூர் ஆழ்கடல் கடற்றொழிலாளர் வர்த்தக சங்க கட்டிடத்தில் நேற்று (03) கடற்றொழிலாளர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கைக்கு இந்தியா வழங்கிய பெரிய அபிவிருத்தி ஒத்துழைப்பு உதவிகளின் வரிசையில், இந்த நாட்டின் மீனவ சமூகத்தை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும், அவர்களின் தொழிலை மேம்படுத்துவதற்கான முயற்சியை வழங்கி வைப்பதற்கும் எங்கள் நாடு முக்கிய இடத்தில் உள்ளது.
நிதியுதவி
2009-10 ஆம் ஆண்டு உள்நாட்டு ஆயுத மோதலை அடுத்து, உள்நாட்டில் இடம்பெயர்ந்த கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட மீனவ குடும்பங்களுக்கு கடந்த காலங்களில் மீன்பிடி உபகரணங்களை வழங்கிய பல நிகழ்வுகளும் இருப்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
கிழக்கு மாகாணத்தின் பல்துறை சார் மானிய உதவிகளுக்கென, சுமார் 2.35 பில்லியன் இலங்கை ரூபாய்களை ஒதுக்க இந்தியா உறுதியளித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு 33 திட்டங்களுக்கான, கட்டமைப்புத் திட்டங்கள் உறுதி செய்யப்படவுள்ளன.
இவற்றில், 7 மீன்பிடித் திட்டங்களை கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் மேற்கொண்டு அவர்களுக்காக மீன்பிடி உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல், நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு, கடற்பாசி கூண்டு வளர்ப்பு, திலாப்பியா குளத்து மீன் வளர்ப்பு மற்றும் பருவகால தொட்டி மேம்பாடு போன்றவை உள்ளடங்கியுள்ளது.
கடின உழைப்பாளிகளான திருகோணமலை கடற்றொழிலாளர்களுக்கு, படகுகளுக்கான வெளியிணைப்பு இயந்திரம், பிடித்த மீன்களை பாதுகாக்க கூடிய உறைவிக்கும் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உயிர்காப்பு அங்கிகளை இன்று வழங்கியுள்ளேன். இவை உங்கள் அன்றாட நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் போன்றவற்றை மேம்படுத்த உதவ அத்தியாவசியமான கருவிகளாகும்.
மீன்வளத்துறை
நீங்கள் பிடித்த மீன்களை தரம் கெடாது பேணுவதற்காக ஆழமான உறைவிப்பான்களை பயன்படுத்தி பாதுகாப்பாக வைத்துக்கொண்டு அதை உறுதி செய்யும் அதேவேளையில், உங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்கும் பங்களிக்கும் என நான் நம்புகிறேன்.
கடலில் சிக்கித்தவிக்கும் அல்லது விபத்துகளை சந்திக்கும் கடற்றொழிலாளர்களையும் மற்றும் அவர்களது படகுகளை பாதுகாப்பாக மீட்பதற்கு அதிக வலு கொண்ட வெளியிணைப்பு இயந்திரங்கள் மற்றும் உயிர்காப்பு அங்கிகள் மிக முக்கிய பங்கினை வகிக்கும்.
இந்தியாவும் இலங்கையும் நமது கரையோரங்களை இணைக்கும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் வேரூன்றிய ஆழமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன.
கடந்த வாரம், இந்தியா - இலங்கை மீன்வளத்துறையின் கூட்டுப் பணிக்குழுவின் 6வது கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. அதில் இரு தரப்பினரும் மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் விரிவாக ஆய்வு செய்தனர்.
இரு நாடுகளின் உறவு
இலங்கையில் மீன்பிடித் தொழிலின் முக்கியத்துவத்தையும், மீனவர்களாகிய நீங்கள், இயற்கையாலும், சந்தைப்படுத்துவதில் உள்ள விடயங்களாலும், நவீன உபகரணங்களை அணுகுவதன் மூலமும் எதிர்கொள்ளும் சவால்களையும் இந்தியாவில் உள்ள நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
இந்த நட்புறவு மற்றும் கூட்டாண்மையின் உணர்வில்தான் இந்தியா இலங்கைக்குத் தேவையான நேரங்களில் தொடர்ந்து துணை நின்றது. இனியும் நிற்கும். இன்றைய உதவி அந்த திசையில் பயணிப்பதற்கான மற்றொரு படியாகும். இந்த முயற்சி பொருளுதவி வழங்குவது மட்டுமல்ல; திருகோணமலை மீனவ சமூகத்தின் நிலையான எதிர்கால சமூகங்களை வலுப்படுத்துவதும், அதற்கான முதலீடுகளை செய்வதுமாகும்.
வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் எங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தையும் உறவையும் தொடர்ந்து வலுப்படுத்துவோம்.
நமது பகிரப்பட்ட எதிர்காலம் செழிப்பு, அமைதி மற்றும் முன்னேற்றம் கொண்டதாக இருப்பதை உறுதிசெய்ய எமது அரசாங்கங்கள், எமது மக்கள் மற்றும் எமது சமூகங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படும். மேலும் இந்த உதவி உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
நீங்கள் இந்த பிராந்தியத்தின் முதுகெலும்பு. உங்கள் வெற்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். உங்கள் வலைகள் எப்போதும் நிரம்பியிருக்கவும், கடலுக்கு செல்லும் எமது மீனவ உறவுகள் அனைவரும் பாதுகாப்பாக கரைக்குத் திரும்பவும் வேண்டி இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |