ரணிலின் முயற்சிகளுக்கு சீன பூரண ஆதரவு

Ranil Wickremesinghe Sri Lanka Government of China China
By Fathima May 31, 2023 07:52 AM GMT
Fathima

Fathima

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசு பூரண ஆதரவை வழங்கும் என்று சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங் வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டுவதாகச் சீன துணை அமைச்சர் நேற்றைய தினம் (30.05.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போது தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றைய தினம் (31.05.2023) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த நெருக்கடியான காலப்பகுதியில் இலங்கைக்குச் சீனாவின் அசைக்க முடியாத ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன துணை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ரணிலின் முயற்சிகளுக்கு சீன பூரண ஆதரவு | China Fully Supports Ranil S Efforts

உறவுகளை வலுப்படுத்தவும் ஒத்துழைப்பு

இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வதில் சீனாவின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய துணை அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய சீனா ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங்கின் இலங்கை விஜயம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சு இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில், தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக் குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொலம்பகே ஆகியோரும் கலந்து கொண்டனர் என கூறப்பட்டுள்ளது.