புத்தர் சிலையின் கீழ் குழந்தையை விட்டுச்சென்றது ஏன்..? பெண் வழங்கிய வாக்குமூலம்

Colombo Sri Lanka
By Nafeel May 08, 2023 04:22 AM GMT
Nafeel

Nafeel

பிறந்து நான்கு நாள்களேயான சிசுவை, வத்தேகம- எல்கடுவ வீதியிலுள்ள விஹாரைக்கு அருகில் உள்ள சிறிய புத்தரின் கூண்டுக்குள் விட்டுச்சென்ற அந்த சிசுவின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை, தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 11 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அந்த பெண்ணை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ள பொலிஸார், சிசுவுக்குத் தேவையான தாய்ப்பாலை பருக வேண்டுமென நீதவான் கட்டளையிட்டார்.

தாயின் கொடுமை எனும் குற்றச்சாட்டின் கீழ் அந்தப் பெண்ணுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பிரதேசத்தில் உள்ள கமெராக்களை பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், லொறியொன்றில் இருந்து போயா தினத்தன்று கூடையுடன் இறங்கும் பெண்ணொருவர், அக்கூடையை சிறிய புத்தர் சிலையின் கூடாரத்துக்குள் வைத்துவிட்டுச் செல்வதை அவதானித்துள்ளார்.

அதன்பின்னர், லொறியின் சாரதியை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போதே, மாத்தளை- உக்குவளையைச் சேர்ந்த 38 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.

திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தாயான இப்பெண் மீது அவரது கணவன் சந்தேகப்படுவதால், சிசுவை இவ்வாறு விட்டுச் சென்றதாக வாக்குமூலமளித்துள்ளார்.