இலங்கை அரசியல் களத்தில் விரைவில் அதிரடி மாற்றம்
இலங்கை அரசியல் களத்தில் விரைவில் அதிரடி மாற்றங்கள் காத்திருக்கின்றன எனவும் நாம் மக்கள் பக்கம் நின்றே தீர்க்கமான முடிவுகளை எடுப்போம் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பமா? கட்சியின் ஆண்டு விழா திட்டமிட்டவாறு நடைபெறுமா? என ஊடகவியலாளர்கள் பலர் என்னிடம் கேள்விகளைத் தொடுத்து வருகின்றார்கள்.
ஒவ்வொரு கட்சிக்குள்ளும் சிறிய, பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளுக்குக் கட்சிகளின் தலைமைகள் தீர்வுகளைக் காணும்.
அரசியல் களத்தில் பாரிய குழப்பம்
நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர். எனவே, எமது கட்சிக்குள் பிரச்சினைகள் இருந்தால் அதனை நான் தீர்த்து வைப்பேன்.
வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இலங்கை அரசியல் களத்தில் பாரிய குழப்பங்களுக்குச் சதித்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்று எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
கட்சிகளின் உள்வீட்டு விவகாரங்களை ஆராயும் ஊடகவியலாளர்கள் பிரதான அரசியல் களத்தில் நடக்கும் – நடக்கப் போகின்ற விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அரசியல் களத்தில் விரைவில் அதிரடி மாற்றங்கள் காத்திருக்கின்றன என்று அறியமுடிகின்றது. எனினும், நாம் மக்கள் நின்றே தீர்க்கமான முடிவுகளை எடுப்போம்.” என தெரிவித்துள்ளார்.