ஜனவரி முதல் பேருந்து கட்டணத்தில் மாற்றம்
பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக, ஜனவரி மாதம் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் இறக்குமதி செலவு
வட் வரி அதிகரிப்பு காரணமாக ஜனவரி மாதம் முதல் பேருந்துகளை இறக்குமதி செய்யும்போது இறக்குமதிக்கான செலவு ரூ. 15,700,000 இலிருந்து மேலும் 2 மில்லியன் ரூபா அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் உரிமையாளர்கள் அந்த விலையில் பேருந்துகளை கொள்வனவு செய்து பயணிகளை ஏற்றி செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உதிரி பாகங்களின் விலைகள், எரிபொருள் மற்றும் சேவைக் கட்டணங்களும் அதிகரிக்குமாயின் மீண்டும் பேருந்து கட்டணமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.