வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கான வட்டி வீதங்களை குறைக்க தீர்மானம்: மத்திய வங்கி
நாட்டின் பொருளாதாரத்தில் சமகாலத்தில் அவதானிக்கப்பட்ட குறிகாட்டிகளின் அடிப்படையில் வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கான வட்டி வீதங்களை முறையே 8.25 மற்றும் 9.25 சதவீதமாகக் குறைப்பதற்கு நாணயச்சபை தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான 4ஆவது மீளாய்வுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கொள்கை வட்டி வீத குறைப்பு
மேலும் தெரிவிக்கையில், அதன்படி கடந்த மாதம் கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சி, அண்மைய வரி மறுசீரமைப்பை அடுத்து பணவீக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைந்தளவிலான தாக்கமே ஏற்பட்டமை, நிலையான பணவீக்க எதிர்பார்க்கைகள், குறைந்தளவிலான வெளிநாட்டுத்துறை அழுத்தங்கள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் கொள்கை வட்டி வீதங்களை 25 அடிப்படைப்புள்ளிகளால் குறைப்பதற்கு நாணயச்சபை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 8.25 மற்றும் 9.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதுடன், நியதி ஒதுக்குவீதத்தை முன்னர் நிர்ணயிக்கப்பட்ட 2 சதவீத மட்டத்திலேயே தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |