பாடசாலை போக்குவரத்து சேவைகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
பாடசாலை போக்குவரத்து வேன்களில் சிசிடிவி அமைப்புகள் கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று (24.11.2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அதனைக் குறைக்க தமது அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வழிகாட்டுதல்கள்
பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டுதல்கள் ஜனவரி முதல் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், "இதற்கு ஒரே பதில் பயணிகளுக்கு அதிகாரத்தை வழங்குவது தான். யாராவது ஒரு பெண்ணையோ அல்லது குழந்தையையோ துன்புறுத்த முற்பட்டால், அதை கண்டுகொள்ளாமல் அதற்கு எதிராக செயல்படுபவர்கள் நமக்குத் தேவை.
ஆனால், நமது பேருந்துத் துறையில் உள்ள சில மோசமான சூழ்நிலைகள் காரணமாக, மக்கள் வேறு ஒருவருக்கு ஆதரவாக முன்வருவதற்கு பயப்படுகிறார்கள்.
எனவே, பேருந்துத் துறையை ஒரு தொழில்முறை நிலைக்குக் கொண்டுவருதல், முச்சக்கர வண்டித் துறையை ஒரு தொழில்முறை நிலைக்குக் கொண்டுவருதல் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தெரிவித்தார்.