அஜான் பிரஹிம் தேரர் தொடர்பான விவகாரம்! விசாரணை நடத்துமாறு உத்தரவு

Bandaranaike International Airport Dinesh Gunawardena Ranil Wickremesinghe President of Sri lanka
By Fathima Jun 02, 2023 11:30 AM GMT
Fathima

Fathima

வணக்கத்திற்குரிய அஜான் பிரஹிம் தேரரை 12 மணித்தியாலங்கள் வரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருக்க வைத்திருந்தமை தொடர்பில் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க துறைமுக மற்றும் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் அவர் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் சமன் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இலங்கையின் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவின் தாய்லாந்து பயணம் மேற்கொண்ட அதேநாளில், மேற்கு அவுஸ்திரேலியாவின் தேரவாத பௌத்த பிக்குவான வணக்கத்துக்குரிய அஜான் பிரம்மவன்ச தேரர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 12 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்றுள்ளது.

வணக்கத்துக்குரிய தேரர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊடாக பேங்கொக் செல்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இரவு 10 மணிக்கு அடைந்து அங்கு முக்கிய பிரமுகர் செல்லும் பகுதியில் காத்திருந்துள்ளார். 

இதன்போது பிரதமர் தினேஷ் குணவர்தனவும் சில அமைச்சர்களும் அதே விமானத்தில் தாய்லாந்து செல்வதற்காக இரவு 12 மணிக்கு விமான நிலையத்துக்கு சென்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மற்றும் தூதுக்குழுவினர் விமானத்தில் ஏறுவதற்காக அதிகாலை 2.30 அளவில் சிறப்பு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

எனினும் ஓய்வறையில் இருந்த வணக்கத்துக்குரிய பிரம்மவன்சோ தேரரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் காலை 7 மணியளவில் விமானம் ஒன்றில் அனுப்பப்படவிருந்த போதும் அதுவும் ரத்து செய்யப்பட்டது.

அத்துடன் மறுநாள் முற்பகல் 10.45க்கு மலேசியாவின் கோலாலம்பூருக்குப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானத்தில் தேரர் அனுப்பப்பட்டார். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தேரர் முதலில் பேங்காக் அல்லது வேறு எந்த இடம் ஒன்றுக்காக செல்வதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் முன்பதிவு செய்யப்படவில்லை மாறாக வேறு ஒரு விமானத்திலேயே முன்பதிவு செய்திருந்தார் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

2023 மே 31 அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துரதிஷ்டவசமான தாமதம் ஏற்பட்ட போது உடனடியாக செயற்பட்டு மாற்று விமானத்துக்கான உதவியை வழங்கியதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.