மன்னார் தீவு மணல் அகழ்வு தொடர்பில் கத்தோலிக்க ஆயர்கள் சபை கவலை
எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நில அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபை தெரிவித்துள்ளது.
மன்னார் தீவில் இடம்பெறும் மணல் அகழ்வு நடவடிக்கைகளால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் தமது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நடவடிக்கைகளால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க ஆயர்கள் சபை
பொருளாதார அபிவிருத்திக்கான சாதகமான முயற்சிகளாக இத்தகைய நடவடிக்கைகள் கருதப்பட்டாலும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடு மேற்கொள்ளப்படுவதுடன், திட்டங்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என கத்தோலிக்க ஆயர்கள் சபை வலியுறுத்தியுள்ளது.

மேலும், எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுப்பதற்கு முன்னர் அப்பகுதி மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் முறையான கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.
மன்னார் தீவின் மீனவ சமூகத்தினரின் வாழ்வாதாரத்திற்கும் நீர்வளத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், மக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆகஸ்ட் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெற்ற இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபையின் முழுமையான அமர்விலும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
