சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் தருவோருக்கு பண வெகுமதிகள்
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் தொடர்பில் தகவல் தருவோருக்கு பண வெகுமதிகள் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாடு தழுவிய 'யுக்திய' நடவடிக்கைக்கு இணங்க பணச் சலுகைகளை அறிமுகப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வழங்கப்படவுள்ள வெகுமதிகள்
இந்த நிலையில் தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, தானியங்கி துப்பாக்கிகளுடன் (T56, AK47, M16, SAR 80, T81) சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய உதவுவதற்கும், சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு தானியங்கி துப்பாக்கியை மீட்டெடுப்பதற்கு வழிவகுக்கும் தகவலுக்கும் 250,000 ரூபாய் வழங்கப்படும்.

அரை தானியங்கி துப்பாக்கிகளை (பிஸ்டல்கள், 84 எஸ்எல்ஆர், ஒட்டோ-லோடிங் சொட்கன்கள்) மீட்டெடுக்க 250,000 ரூபாயும், ரிவோல்வர் ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்ய 150,000 ரூபாயும் வழங்கப்படும்.
சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ரிவால்வரை மீட்டெடுப்பதற்கு 100,000 ரூபாயும், ரிப்பீட்டர் துப்பாக்கியை மீட்டெடுப்பதற்கு 50,000 ரூபாயும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுக்கு 15,000 ரூபாயும் வழங்கப்படும்.

சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து கைக்குண்டு மீட்கப்பதற்கு 25000 ரூபாயும், சந்தேகத்திற்கு இடமின்றி அதனை மீட்பதற்கு 15,000 ரூபாயும் வழங்கப்படும்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை மீட்டெடுப்பது குறித்த தகவல்களுக்கு 15,000 ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.