கண்டி வைத்தியசாலை இருதய வடிகுழாய் இயந்திரங்கள் முழுமையாக பழுதடைவு
கண்டி தேசிய வைத்தியசாலையில் நிறுவப்பட்ட இரண்டு இருதய வடிகுழாய் இயந்திரங்களில் ஒன்று, கடந்த ஆண்டு மே மாதம் 06ஆம் திகதி முதல் முழுமையாக பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இதயநோய்களைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள சுமார் 8,000 நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதய வடிகுழாய் அலகு இயந்திரம், இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் கரோனரி
தமனிகளில் அடைப்புகளைக் கண்டறிதல், ஸ்டென்ட் சிகிச்சைகள் மற்றும் இதயத்தில்
உள்ள துளைகளை கண்டறிந்து சரிசெய்தல் உட்பட பலவிதமான நோயறிதல் மற்றும்
சிகிச்சைகளுக்கு உதவுகிறது.
நாடளாவிய ரீதியில் உள்ள 11 வைத்தியசாலைகளில் 14 இருதய வடிகுழாய் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அவற்றில் 02 இயந்திரங்கள் கண்டி தேசிய வைத்தியசாலையில் இயங்கி வருகின்றன.
இந்தநிலையில், புற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கண்டி தேசிய
வைத்தியசாலையின் கதிரியக்க சிகிச்சைப் பிரிவின், குளிரூட்டும் முறை கடந்த
வருடம் நவம்பர் மாதம் முதல் செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க
தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் குறிப்பிடுகிறது.
6 மாதங்களாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.