காத்தான்குடியில் அனுஷ்டிக்கப்படவுள்ள ஷுஹதாக்கள் தினம்
ஆகஸ்ட் 03 திகதி தேசிய ஷுஹதாக்கள் தினம் காத்தான்குடி அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1990 ஆம் வருடம் ஒகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி காத்தான்குடியில் இரு பள்ளிவாயல்களில் இரவு நேர தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டு 2025.08.03 திகதியுடன் 35 வருடங்களாகிறது.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மறக்க முடியாத இந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் நிகழ்வுகளின் ஒழுங்குகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று (31) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் மண்டபத்தில் இடம்பெற்றது.
சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.ரமீஸ் (ஜமாலி) நெறிப்படுத்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சம்மேளனத்தின் பதில் தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை, காத்தான்குடி கிளை தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம்.அப்துல் கபூர் (மதனி), தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் ஈ.எம். றுஸ்வின், காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எல்.எம்.பரீட் மற்றும் ஹுஸைனியா மஸ்ஜித், மீரா ஜும் ஆ மஸ்ஜித் ஆகியவற்றின் நிர்வாகிகள், சம்மேளன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (03) திகதி தேசிய ஷுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்படும் என அறிவித்ததுடன் அன்றைய நாளில் ஒழுங்கு செய்துள்ள ஷுஹதாக்கள் நினைவு நிகழ்வுகள் மற்றும் குருக்கள்மட சம்பவம் தொடர்பிலான அனைத்து நிகழ்வுகளிலும் வர்த்தகர்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


