அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பில் எவ்வித அரசியல் நோக்கமில்லை : ரஞ்சித் சியாம்பலாபிட்டிய தெரிவிப்பு
புதிய இணைப்பு
அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனைகளில் அரசியல் நோக்கமில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “மக்களுக்கு அதிகபட்ச நிவாரணத்தை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தலைமையிலான நிபுணர் குழு வழங்கிய பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களின் அடிப்படையில் இந்த பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வாழ்க்கை நிலைமைகள், பொருளாதார நிலை போன்ற அனைத்து அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தி குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது” என்றும் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது குறித்து வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில் ”அரச சேவையில் சம்பளம், வேதனங்கள் மற்றும் ஏனைய பணிக்கொடைகளை மீளாய்வு செய்து, அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தைத் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்மொழிவு 2025 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான விதந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நிபுணத்துவக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இடைக்கால அறிக்கை
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் உதய செனவிரத்னவின் தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச துறையின் பிரதான தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளது.
இதன்போது கிடைத்த தகவல்களைப் பகுப்பாய்வு செய்த பின்னர் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் விதந்துரைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு கொள்கை ரீதியாக அங்கீகாரம் வழங்குவதற்கும், 2025 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கி அமுல்படுத்துவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அடிப்படைச் சம்பளம்
அதற்கிணங்க நிபுணர் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிவிக்கையில் விதந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக மாதாந்தம் 25,000 ரூபாயை வழங்கல், அரச சேவையின் ஆகக் குறைந்த ஆரம்ப மாதாந்தச் சம்பளத்தை ஆகக் குறைந்தது 24 வீதத்தால் அதிகரித்து வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுடன் மொத்தச் சம்பளமாக 55,000 ரூபாய்வரை அதிகரித்தல்.
அனைத்துப் பதவிகளுக்குமான அடிப்படைச் சம்பளத்தை அதற்கேற்புடைய வகையில் சீராக்கல், அரச வர்த்தகக் கம்பனிகள் வங்கிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இப்புதிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையை நடைமுறைப்படுத்தல்.
அத்துடன் 2030 ஆம் ஆண்டாகும் போது அரச சேவையில் ஒட்டுமொத்த பணியாளர்களை பத்து இலட்சமாகவோ அல்லது அதற்குக் குறைவான மட்டத்திற்கு மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுகள்
2025 ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்த அரச சேவையை இயன்றவளவுக்கு டிஜிட்டல்மயப்படுத்தல், தன்னியக்க முறை மூலமான இலத்திரனியல் கட்டமைப்பு ரீதியான அரச நிர்வாக முறைமையை அறிமுகப்படுத்தல்.
அரச துறையிலுள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களும் உள்ளடங்கலாக ஆகக் குறைந்தது 1000 ரூபாய் மாதாந்தப் பங்களிப்பை வழங்கல்.
அத்தோடு, மிகவும் கவர்ச்சிகரமான நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையிலான மருத்துவக் காப்புறுதி முறைமையை 2025 ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தல்.
தகுந்த வேலை ஆய்வை மேற்கொண்டு, ஒட்டுமொத்த அரச துறை ஆளணியினர் மற்றும் சேவைகள் தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வை மேற்கொள்வதற்காக 2025 ஆண்டில் நடவடிக்கை எடுத்தல்.
அதற்கமைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் செயலாற்றுகை சுட்டிகளை தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தின் அடிப்படையில் சம்பள உயர்வை வழங்கல் மற்றும் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்றுள்ள அரச ஊழியர்களுக்கு உரித்தான சம்பள உயர்வை வழங்கி, அவர்களுடைய ஓய்வூதிய சம்பளத்தை திருத்தம் செய்தல்.
மேலும், ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுகள், தற்போது சேவையிலுள்ள அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 50 வீதத்திற்குச் சமமான வகையில் 2025 ஜனவரி மாதம் தொடக்கம் வழங்கல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW