இந்த வரவு செலவுத் திட்டம் அரசாங்க ஊழியர்களை ஏமாற்றி உள்ளது; பாரிய தொழிற்சங்க போராட்டம் குறித்து எச்சரிக்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் அரசாங்க ஊழியர்களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டின் பின்னர் அரசாங்க ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பும் வழங்கப்படவில்லை என ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
20 ஆயிரம் ரூபாய் சம்பளம்
அரசாங்க ஊழியர்கள் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிப்பை கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வரவு செலவு திட்டத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் 7800 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை மேலும் பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்த பரிந்துரை திருப்திகரமானது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை எனவும், வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் முன்னதாகவே பெறுமதி சேர் வரி18% மாகஅதிகரிக்கப்பட்டதாகவும் மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களும் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
வாழ்க்கைச் செலவு
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு கொடுப்பனவவு அதிகரிப்பு சம்பள அதிகரிப்பதாக கருதப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியர் சம்பளம் முரண்பாடு குறித்து இந்த வரவு செலவு திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எந்த ஒரு அரசாங்க ஊழியரும் இவ்வாறான ஒரு சம்பள அதிகரிப்பினை எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் கல்வித் துறை தொடர்பான எவ்வித புதிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் மூன்றாம் வாசிப்புகளின் போது அரசு ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடரில் சரியான தீர்மானம் எடுக்க தவறினால் பாரிய தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.