யாழில் தடுப்பு கைதி உயிரிழப்பு விவகாரம்: சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளி
பொலிஸாரினால் சித்திரவதையால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் இளைஞன் வைத்தியசாலையில் கூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 25) எனும் இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (20.11.2023) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் தான் இளைஞன் உயிரிழந்துள்ளார் என குற்றம் சாட்டி வருகின்றனர்.
சித்திரவதை தொடர்பில் காணொளி
அந்நிலையில், உயிரிழந்த இளைஞன் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது, தனக்கு நடந்த சித்திரவதை தொடர்பில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அதில் "என்னை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி தாக்கினார்கள்.
துணி ஒன்றினால் முகத்தினை மூடி கட்டி தண்ணீர் ஊற்றி தாக்கினார்கள். பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பை ஒன்றினை முகத்தில் போட்டு சித்திரவதை புரிந்தார்கள். பின்னர் எனக்கு குடிக்க சாராயம் தந்தார்கள்.
தாக்குதல்கள் சித்திரவதைகள் தொடர்பில் வெளியில் சொல்ல கூடாது என கடுமையாக என்னை மிரட்டினார்கள். பொலிஸாரின் தாக்குதலுக்கு பிறகு என்னால் சாப்பிட முடியவில்லை என தெரிவிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.