மட்டக்களப்பில் வேலைவாய்ப்பின்றி 50000 இளைஞர் யுவதிகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி ஐம்பதாயிரம் இளைஞர் யுவதிகள் காணப்படுகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் (Sudarshini Srikanth) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரூமேனியா நாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகத் தேர்வு நேற்று (12) காலை மட்டக்களப்பு கிரீன் மண்டபத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வேலை வாய்ப்பு
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தின் சனத்தொகையில் 7 சதவீதமான இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அனுசரணையுடன் தனியார் நிறுவனம் ஒன்றினால் மேற்படி ரூமேனியா நாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக இளைஞர் யுவதிகள் அனுப்பப்படவுள்ளனர்.
இந்த நிலையில், ருமேனியா நாட்டிலிருந்து வருகை தந்த ரூமேனியா நாட்டு பிரதிநிதி ரொக்சானா(Roxana) தலைமையில் இந்த நேர்முகப் பரீட்சைகள் இடம் பெற்றன.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலுமிருந்து சுமார் 350 இளைஞர் யுவதிகள் பங்கெடுத்திருந்தனர்.
பரீட்சையில் தோற்றியவர்கள்...
இந்த நேர்முகப் பரீட்சையில் தோற்றியவர்கள் சுமார் எட்டு மாத காலத்திற்குள் ரோமேனிய நாட்டுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அதிகமான நிறுவனங்கள் மாவட்டத்திற்கு வருகை தந்து நம்பகத்தனமான முறையில் இளைஞர் யுவதிகளை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அனுப்புகின்ற போது எமது மாவட்டத்தில் நிலவுகின்ற வேலைவாய்ப்பு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








