9 வருடங்களின் பின் அதிகரித்துள்ள அரச ஊழியரின் அடிப்படைச் சம்பளம்! விளக்கமளித்த பிரதியமைச்சர்
9 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை தற்போதைய அரசாங்கமே அதிகரித்துள்ளதாக தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்றைய (18) நாடாளுமன்ற அமர்வில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
அதன்படி, ஆசிரிய சேவையில் தற்போது இணையும் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 31,490 ரூபாவாகும். எனினும் ஏப்ரல் மாதத்தில் அது 39,211 ரூபாவாகவும் 3 வருடங்களின் பின் 53,060 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகரிக்கப்பட்டுள்ள அடிப்படை சம்பளம்
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவு திட்டம் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வரவு செலவு திட்டமாகும். 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.
9 வருடங்களுக்கு பின்னர் இம்முறை அது அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. அரச சேவையில் இணைந்துகொள்ளும் (பி.எல்.1) ஒருவருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அடிப்படைச் சம்பளமான 24,250 ரூபா, 15,750 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு தற்போது 40ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களுக்கான வாழ்க்கைச்செலவு கொடுப்பனவாக 17,800 ரூபாவும் வழங்கப்படுகிறது.
அதேபோன்று கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் அடிப்படைச் சம்பளம் 28,940 ரூபாவாகும்.
வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதற்கமைய அது 3 வருடங்களில் 50,630 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது. அவர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் 21,690 ரூபா அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் வாழ்க்கைச்செலவு கொடுப்பனவாக 17,500 ரூபாவும் வழங்கப்படுகின்றது.
புரிந்துகொள்ளாத சிலரின் விமர்சனம்
மேலும், புதிதாக இணைந்து கொள்ளும் வைத்தியர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 54,290 ரூபாவாகும். அது இந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் 91,750 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.
அவர்களின் மேலதிக நேர கொடுப்பனவாக ஒரு மணித்தியாலத்திற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 687 ரூபா, ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் 764 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் தற்போது 37,260 ரூபாவாகும். அவர்களின் அடிப்படைச் சம்பளம் 63,640 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. இந்த துறைக்கு புதிதாக இணைந்துகொள்பவருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் 10,606 ரூபா அதிகரிக்கப்படுகிறது.
இவ்வாறு அரச துறையில் அனைத்து தரப்பினரின் அடிப்படைச் சம்பளம் அவர்களின் சேவைக் காலத்தின் பிரகாரம் அதிகரிக்கப்படுகின்றது.
இதனை சரியாக புரிந்துகொள்ளாத சிலரே விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதனை நாம் கருத்திற்கொள்ளப்போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |