டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து பங்களாதேஷ் அணி வெளியேற்றம்!
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் அணி வௌியேற்றபட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் இந்தியா செல்லமாட்டோம் என பங்களாதேஷ் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, அந்த அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, ஸ்காட்லாந்து அணி 'சி பிரிவில்' இத்தாலி, நேபாளம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் விளையாடவுள்ளது.
டி20 உலகக்கிண்ணத் தொடர்
வீரர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து, இந்தியாவில் நடைபெறவிருந்த போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஐசிசியை அணுகியது. ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்தியாவில் பாதுகாப்பு நிலவரம் மாறவில்லை என்றும், அரசாங்கம் வீரர்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிப்பதாகவும் பங்களாதேஷ் விளையாட்டுத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்தார்.
எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில், பங்களாதேஷ் தொடரிலிருந்து விலக, ஸ்காட்லாந்து அணியை மாற்று அணியாக ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.
2026 டி20 உலகக்கிண்ணத் தொடர் திட்டமிட்டபடி பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை, இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.