ஓய்வு பெறும் முடிவை மாற்றிய கிரிக்கட் வீரர்: மகிழ்ச்சியின் உச்சத்தில் இரசிகர்கள்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெறுவதாக பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேசிய பின்னர் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளதாக தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.
குறித்த முடிவானது பங்களாதேஷ் இரசிகர்களிலேயே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இரசிகர்கள் உற்சாகம்
பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக தனது ஓய்வு முடிவை நேற்று முன்தினம் (06.07.2023) கண்ணீருடன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவரது முடிவானது பங்களாதேஷ் கிரிக்கெட் இரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்ததுடன், அணியை ஒரு நாள் போட்டிகளில் யார் வழிநடத்துவது என்பது தொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஆலோசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் அக்டோபர் முதல் தொடங்க உள்ள நிலையில், தமிம் இக்பாலின் ஓய்வு முடிவு அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.
இந்நிலையில் தமிழ் இக்பால் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றதால் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.