ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சிகள் : வெளியான அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி (Sisira Jayakody) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், மாதாந்தம் 67,500 ரூபா கொடுப்பனவுடன் ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக அரசாங்கம் 320 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
வைத்திய அமைச்சு
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சுதேச வைத்திய அமைச்சு என்ற வகையில் நாம் இதுவரை பெரும் வெற்றியை பெற்றுள்ளோம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக பல்கலைக்கழகங்களில் இருந்து சித்தியடைந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் தொழிற்பயிற்சி தாமதமானது.
அதன்படி, ஜூன் மூன்றாம் திகதி முதல் ஆயுர்வேத சித்த மற்றும் யூனானி பட்டதாரிகள் 207 பேருக்கு 67,500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவுடன் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.