அவசியமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்துவதை தவிருங்கள்
அவசியமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை(Antibiotics) பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக நுண்ணுயிர் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பிகளை ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே எடுக்க வேண்டும் எனவும், பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் கால அளவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முறையான உட்கொள்கைகள்
இது தொடர்பாக தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
சிலர் மருந்தகங்களில் இருந்து நேரடியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பெற்றுக்கொள்வதை காணமுடிகின்றது.
அவ்வாறான முறையில் மருந்துகளை உட்கொள்ளும் பழக்கமும், முறையான மருந்துச்சீட்டுகள் இன்றி மருந்துகளை வழங்கும் மருந்தகங்களும் தவறானது.
அத்துடன் பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான நாட்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வது அல்லது பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் அவற்றை தொடர்வதும் பொருத்தமற்றது.
மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு குறித்த மருத்துவ ஆலோசனைகளை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கலாம் மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கான தேவையையும் குறைக்கலாம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |