மகிந்தவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் அச்சுறுத்தல்: மறுக்கும் ஆளுமட தரப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு(Mahinda Rajapaksha) ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று(24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
துறைசார் நிபுணத்துவ குழுவின் அறிக்கைக்கு அமையவே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு மீளப்பெறப்பட்டு, போதுமான அளவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நீடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள்
முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. ஆனால் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்து மாத்திரம் தான் அதிகளவில் பேசப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவின் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், ட்ரோனர் கருவி ஊடான தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் சம்பவங்களை நடத்தியவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல் பற்றி பேசுவது ஒன்றும் ஆச்சிரியத்துக்குரியதல்ல.
கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட இராணுவத்தினர் அவர்களின் தென்னந்தோப்புக்களை பராமரிப்பதற்கும், வீட்டு நாய்களை பராமரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டதை மக்கள் அறிவார்கள்.
அனுதாப அரசியல்
மகிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு அவரை சார்ந்துள்ளவர்கள் அனுதாப அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கடந்த காலங்களை போன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் செல்லவில்லை. மக்களோடு மக்களாகவே செயற்படுகிறார்கள்.
மகிந்த தேசிய பாதுகாப்பையும், இன நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தியிருந்தால் ஓய்வுப் பெற்றதன் பின்னரும் இராணுவ பாதுகாப்பில் இருக்க வேண்டிய தேவை கிடையாது.
மேலும், முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பதற்கு கோடி கணக்கில் அரசு செலவு செய்ய வேண்டிய தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |