அஸ்ட்ரா செனெகா நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

World
By Aanadhi May 08, 2024 06:28 PM GMT
Aanadhi

Aanadhi

உலக அளவில் பேசுபொருளாகிய கோவிஷீல்ட் தடுப்பூசி விவகாரம் தொடர்பில் அஸ்ட்ரா செனெகா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியை சர்வதேச சந்தையில் இருந்து திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசி அரிதாக பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அஸ்ட்ரா செனெகா நிறுவனம் ஒப்புக்கொண்ட நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா செனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை உருவாகியிருந்தன. இந்த தடுப்பூசி சர்வதேச சந்தையில் கோவிஷீல்ட் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில், அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டதால் தங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் பதிலளித்த அஸ்ட்ரா செனெகா நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில் இரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஒப்புக் கொண்டது.

இது, அந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்நிலையில், கொரோனாவிற்கான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை சர்வதேச சந்தையில் இருந்து திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாக அஸ்ட்ரா செனெகா நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கான தேவை குறைந்ததால், அதன் உற்பத்தியை நிறுத்தி விட்டதாகவும், இனி இந்த தடுப்பூசியை பயன்படுத்த மாட்டோம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வணிக ரீதியாக எடுத்த முடிவு என்றும் நிறுவனம் கூறியுள்ளது.