போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் இளைஞன் கைது!

Jaffna Sri Lanka
By Nafeel May 10, 2023 03:40 AM GMT
Nafeel

Nafeel

போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் பளையில் வைத்து இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அந்த சந்தேக நபருடன் தொடர்புடைய இளைஞரே யாழ்ப்பாணம் நகரில் வைத்து செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின்னியல் அச்சு இயந்திரத்தை நேற்றிரவு 8 மணியளவில் வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட வேளை இளைஞர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

பளை பகுதியில் வைத்து கடந்த வாரம் ஒருவர் 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டார்.

அவருக்கும் யாழ்ப்பாணம் நகரில் கைது செய்யப்பட்டவருக்கும் தொடர்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். சந்தேக நபரை வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மன்று வழக்கு விசாரணைகளை குற்ற விசாரணைப் பிரிவுக்கு (சிஐடி) மாற்ற அனுமதியளித்தது. யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்தின் கட்டளையில் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.