வாசனைப் பொருட்கள் இறக்குமதிக்கான அனுமதி இடைநிறுத்தம்

By Madheeha_Naz Mar 12, 2024 07:43 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

மீள் ஏற்றுமதிக்காக மிளகு உள்ளிட்ட சில வாசனைப் பொருட்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் விளையும் மிளகு, ஜாதிக்காய், வசவாசி, மஞ்சள், இஞ்சி, ஏலக்காய் போன்ற பல வகையான மசாலாப் பொருட்களை மீள் ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (11.03.2024) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

குறிப்பாக மீள் ஏற்றுமதிக்காக இந்த வாசனை திரவியங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது உள்ளூர் மசாலா விவசாயியை ஊக்கப்படுத்துவதாகவும் அதனால் உள்ளூர் மசாலா உற்பத்திப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போது உலகின் சிறந்த மசாலாப் பொருட்களில் முதலிடம் வகிக்கும் இலங்கையின் மசாலாப் பொருட்களின் தரத்தில் இது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கும், மீள் ஏற்றுமதிக்காக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாசனை திரவியங்களை இடைநிறுத்துவதற்கும் தீர்மானித்ததாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளூர் மசாலாப் பொருட்களின் தரத்தை மேலும் பேணுவதற்கான நீண்ட ஆய்வை மேற்கொள்வது குறித்தும், உள்ளூர் மசாலாப் பொருட்களை தோட்டப் பயிர்களாக வளர்ப்பதற்கு அரசாங்கம் ஆற்ற வேண்டிய பங்களிப்பைப் பற்றியும் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.