இலங்கை முழுவதும் ஆயுதம் தாங்கிய படை! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் விசேட உத்தரவு
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்துமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அனைத்து பாதுகாப்புத்துறை பிரதானிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனை குழுவின் கூட்டத்தின் போது, தேர்தல் காலம் முழுவதும் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அடிப்படை உரிமை
இதன்போது அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த இரண்டு வருட காலமாக நாட்டில் நிலவிய நெருக்கடி நிலையின் போது கடுமையான பல தீர்மானங்களை மேற்கொள்ள நேர்ந்தது. அந்த காலங்களில் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடிந்தது.
அதேபோன்று எதிர்காலத்திலும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களினதும் நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஜனாதிபதி சார்பில் நன்றி
மேலும் நாட்டில் நெருக்கடி நிலை நிலவிய போது அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் பாதுகாப்பு படைகளின் ஆளணி பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா,கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உள்ளிட்ட முப்படைகளின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களினதும் பிரதானிகள் கலந்துகொண்டிருந்தனர்.