அதிபர்களுக்கான நியமனங்கள் சுற்றுநிருபங்களின் அடிப்படையில் அமையும்: அமைச்சர் உறுதி
அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் நடைபெற்றிருக்குமாயின் அது தொடர்பாக ஆராய்ந்து, அவை நிவர்த்திக்கப்படும் என்றும் அரச சுற்றுநிருபங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற நியமனங்களில் தலையிடுவது, மக்களுக்கு செய்கின்ற அநீதியாக அமைந்து விடும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் புதிதாக அதிபர் நியமனம் பெற்றுக்கொண்டவர்களுள் ஒரு பகுதியினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று(21.12.2023) சந்தித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கோரிக்கை முன்வைப்பு
புதிதாக அதிபர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்களில் ஒரு பகுதியினர் வெளி மாவட்டங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு நியமிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே ஆசிரியர்களாக வெளி மாவட்டங்களில் கடமையாற்றி இருப்பது உட்பட பல்வேறு காரணங்களை முன்வைப்பதுடன், தம்மை சொந்த மாவட்டங்களில் கடமையாற்ற சந்தர்ப்பம் அளிக்குமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
குறித்த கோரிக்கைகள் தொடர்பாக, சம்மந்தப்பட்ட அதிபர்களின் கருத்துக்களையும், ஆதங்கங்களையும் கேட்டறிந்த அமைச்சர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, அந்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்ததுடன், நியமனங்கள் அனைத்தும் நியாயமானதாகவும் சுற்று நிருபங்களுக்கு அமைவானதாகவும் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அவர் மனிதாபிமான காரணங்களையும் பரிசீலிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



