மத்திய கிழக்கிற்கு விஜயம் செய்யவுள்ள அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மத்திய கிழக்கின் ஐக்கிய அரபு இராஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அந்த அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
துறைகளை மேம்படுத்தும் திட்டம்
இந்த நிலையில், ஜனாதிபதியின் குறித்த விஜயத்தின் போது எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்முதல், மின்சாரம் மற்றும் எரிசக்தி திட்டங்கள் மற்றும் வர்த்தகம், முதலீடு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் ஒரு கூட்டு ஆணையத்தை உருவாக்குவது, இந்த விஜயத்தின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெப்ரவரியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகார பூர்வ விஜயம் மேற்கொள்ளும் திட்டங்களை எடுத்துரைத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் எரிசக்தி மற்றும் பொருளாதாரத் துறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |