பொதுப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்ப ஆவணங்களின் துல்லியத்தை சரிபார்க்க வேண்டியிருப்பதால், அனுமதிகளை வழங்க சிறிது காலதாமதம் ஏற்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது நாடுகளுக்கு நாடு மாறுபடும். மத்திய கிழக்கில் ஒரு மாதத்திற்குள் அனுமதிகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு
இது தொடர்பில் மேலும் கூறுகையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளை புதுப்பிப்பதற்கும், அவர்களின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்கும் இதுவரை 52,866 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகக் கிளைக்கு இந்த ஆண்டில் இந்தளவு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.
2024 ஆம் ஆண்டில், வெளிநாட்டுத் தூதரகக் கிளையால் இதுபோன்ற 61,229 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், 59,285 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.