பிற நாடுகளை அச்சுறுத்தும் வகையில் இலங்கையின் துறைமுகங்களை பயன்படுத்த அனுமதியோம் - அலி சப்ரி உறுதி
(நா.தனுஜா)
இலங்கையானது மேற்குலக நாடுகளுடனும் இந்தியா மற்றும் சீனாவுடனும் சிறந்த நட்புறவைப் பேணிவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
, இருப்பினும் இலங்கையில் இராணுவத்தளத்தை அமைப்பதற்கோ அல்லது பிறிதொரு நாட்டை அச்சுறுத்தும் நோக்கில் இலங்கையின் துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கோ தாம் எந்தவொரு நாட்டுக்கும் இடமளிக்கமாட்டோமெனத் தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவின் இன்ஸியான் நகரில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் அலி சப்ரி, வெளிநாட்டு ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா மற்றும் மேற்குலக நாடுகளுடன் தாம் பேணிவரும் நல்லுறவு பெரும்பாலும் வர்த்தகத்தொடர்புகளை அடிப்படையாகக்கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளைப்போன்று தாமும் எந்தவொரு நாட்டுடனும் வணிகரீதியான தொடர்புகளைப் பேணுவதற்குத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பாதுகாப்பானதொரு இந்துசமுத்திரப்பிராந்தியத்தையே தாம் விரும்புவதாகவும், எனவே இலங்கையில் இராணுவத்தளத்தை அமைப்பதற்கோ அல்லது பிற நாடுகளை அச்சுறுத்தும் வகையில் இலங்கையிலுள்ள துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதியளித்துள்ளார்.
அடுத்ததாக தற்போது பணவீக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதுடன் சுற்றுலாத்துறை மீளெழுச்சியடைந்திருப்பதாகவும் டொலரின் பெறுமதி ஸ்திரமடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இவ்வருடம் பொருளாதாரம் ஓரளவுக்கு மீட்சியடையும் என்றும், அடுத்த வருடம் குறிப்பிடத்தக்களவிலான பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கமுடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதியின்கீழ் சுமார் 3 பில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இருதரப்பு மற்றும் பல்தரப்புக் கடன்வழங்குனர்களுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டளவில் மீண்டும் கடன் உறுதிப்பாட்டை அடைந்துகொள்ளமுடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.