திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியான தகவல்
திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான அனைத்து ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட திருகோணமல தேர்தல் மாவட்டத்தில் இம்முறை மொத்தமாக 315925 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
திருகோணமலையில் வாக்களிப்பு நிலையங்கள்
அத்துடன் வாக்களிப்பு நிலையங்களாக 318 வாக்களிப்பு நிலையங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் திருகோணமலை தேர்தல் தொகுதியில் 106 வாக்களிப்பு நிலையங்களும் மூதூர் தேர்தல் தொகுதியில் 114 வாக்களிப்பு நிலையங்களும் சேருவில தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் நிலையமாக திருகோணமலை விபுலானந்தா கல்லூரியும் காணப்படுகின்றது.
இம்முறை தேர்தலுக்காக சுமார் 4000 அரச ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சிகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதுடன் இம்முறை தேர்தல் முறைப்பாடுகளாக இதுவரை 56 முறைப்பாடுகள் பதிவாகி உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |