அஹ்மட் அல் அஹ்மடிற்கு குவியும் பாராட்டுக்களும் நிதி உதவியும்

Australia World
By Fathima Dec 19, 2025 11:38 AM GMT
Fathima

Fathima

அவுஸ்திரேலியாவின் பொன்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டின் போது, தனது உயிரை பொருட்படுத்தாமல் துப்பாக்கிதாரியை எதிர்கொண்டு பல உயிர்களைக் காப்பாற்றிய அஹ்மட் அல் அஹ்மடிற்கு (Ahmed al Ahmed) உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுக்களும் நிதி உதவியும் குவிந்து வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்களின் ஹனுக்கா (Hanukkah) பண்டிகை கொண்டாட்டத்தின் போது 2 துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தினர்.

நிதி உதவி

இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததுடன், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இந்த தாக்குதலின் போது அஹ்மட்,ஒரு துப்பாக்கிதாரியைத் தாக்கி அவரிடமிருந்த ஆயுதத்தைப் பறித்தார்.

அஹ்மட் அல் அஹ்மடிற்கு குவியும் பாராட்டுக்களும் நிதி உதவியும் | Ahmad Al Ahmad Receives Financial Support

இந்த மோதலின் போது இரண்டாவது துப்பாக்கிதாரியால் சுடப்பட்ட அஹ்மட், தற்போது சிட்னி சென்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

அஹ்மதுவின் வீரத்தைப் பாராட்டி ஆரம்பிக்கப்பட்ட 'GoFundMe' நிதி சேகரிப்புப் பக்கத்தின் மூலம் 43,000க்கும் அதிகமானோர் நிதி வழங்கியுள்ளனர்.

இதன் மூலம் திரட்டப்பட்ட 2.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களுக்கான (சுமார் 1.65 மில்லியன் அமெரிக்க டாலர்) காசோலை மருத்துவமனையில் வைத்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிரியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 43 வயதான அஹ்மட் 2 பிள்ளைகளின் தந்தை ஆவார். இவரை அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் மாநில முதலமைச்சர் ஆகியோர் நேரில் சந்தித்துப் பாராட்டினர்.