ஜனாஸா எரிப்பை விசாரிக்க ஆணைக்குழு நிறுவ வேண்டும்
ஜனாஸா எரிப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும் என நான் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு வழங்கப்பட்டுள்ள பதிலில் திருப்தி இல்லை என ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, "கோவிட் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பாக முடிவெடுத்த குழு தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மனங்களை சாந்தப்படுத்தவும் ஜனாதிபதி ஆணைக்குழுவை அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் உடனடியாக நியமிக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகம்
தகனம் மூலம், அநியாய சம்பவத்தை செய்த குழுவுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என முஸ்லிம் சமூகத்தின் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நான் அனுப்பிய எழுத்துமூல மகஜருக்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பியுள்ள பதில் திருப்தியளிக்கவில்லை.
முஸ்லிம் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டமை இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைத்தது என்பதையே அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.
இதுவரை பல்வேறு தரப்பினராலும் வெளியான கருத்துகள் அனைத்தும் உண்மைகளையே உணர்த்துகின்றன. இந்த அநியாயம் முஸ்லிம் சமூகத்தின் இதயங்களை கடுமையாக தாக்கியுள்ளதுடன் நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் பரப்பக்கூடிய ஒரு கருத்தியல் ஆயுதமாக அரசியல் மேடையில் இந்த விடயம் உள்ளது.
இறந்த உடல்கள்
இவற்றை கவனத்தில் கொண்டு கோவிட்டின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக 23/06/2024 அன்று நான் எழுதிய உருக்கமான இரண்டு பக்க கடிதத்தில் என்னை சாதாரண குடிமகன் போன்று கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணிலின் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பொது உறவுகள்) திரு. டபிள்யூ.எம்.பாத்தியா விஜயந்த அவர்கள் ஜனாதிபதி செயலாளருக்குப் பதிலாக என ஒப்பமிட்டு அனுப்பிய மூன்று வார்த்தைகள் கொண்ட பதில் கடிதம் எனக்கோ அல்லது முஸ்லிம் சமூகத்திற்கோ திருப்தியானதாக இல்லை.
ஏனென்றால், "கோவிட் இறந்த உடல்களை தகனம் செய்வது குறித்து" என்ற வார்த்தை கூட இல்லாமல் "கருத்துகள் மற்றும் பரிந்துரைகள்" என்று மட்டுமே கடிதம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
இந்த பதில் கடிதத்தின் இறுதியில் கூறப்பட்டுள்ளபடி, அதாவது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நான் வைக்கும் "நம்பிக்கை" அப்படியே உள்ளது எனவே கோவிட் சடலங்களை தகனம் செய்தமை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவை மீண்டும் நிறுவ கோரிக்கை விடுக்கிறேன்“ எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |